Saturday 9 May 2020

வையவன் ரீடர் 1




வையவன் ரீடர் என்ற தலைப்பில் வெளிவரும் இந்த நெடிய தொடரில் வையவன்  எழுதிய எல்லாப்படைப்புக்களின்  மாதிரியை அவரது படைப்பாற்றலின் பன்முகங்களை, கடந்த பத்தாண்டுகளாக நானே வாசித்தும் என் ஆய்வு மாணவர்கள் மற்றும் என் அன்னையார் அவர்களையும் வாசிக்கச் செய்தும் ,ஆய்வு செய்யவைத்தும் பெற்ற அனுபவம் முதன்மையானது.என்னைத் தம் நம்பிக்கைக்குரியவராகக் கருதி இந்தப்பொறுப்பை ஏற்பிக்கச்செய்து வாய்ப்பளித்தமைக்கு என் நன்றி
படைப்பாளரின் படைப்புக்களை அணுகும்முன்  அவர் பிறந்த ஊர்,பின்னணி ஆகியவற்றினை முதலில் பதிவு செய்கிறேன்

டாக்டர்.ஜவாஹர் பிரேமலதா ,
 இணைப்பேராசிரியர் ,சேலம் அரசுக்கல்லூரி(தனியாட்சி)

காற்று அங்கிருந்து பெரும் வேகத்தோடு வீசும். ஆடிக்காற்று வீசினால் மரங்கள் எல்லாம் வெறிபிடித்தது போல் தலையாட்டும். ஜன்னல்களும் கதவுகளும் படார் படாரென்று அறைந்து காற்றின் வேத்தைக் குறித்து புகார் சொல்லும்.
அன்று அது வடாற்காடு மாவட்டம். இன்று திருப்பத்தூர்  மாவட்டம். அதிலே உலகப்புகழ் பெற்ற இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ள நகரம் வாணியம்பாடி அங்கிருந்து கிழக்கே செல்கிறது ஒரு மலைச்சாலை. ஜவ்வாது மலையோரத்து ஊரான ஆலங்காயம் செல்லும் சாலை அது.
காற்றின் ஜன்ம பூமி அது தானா என்று ஐயப்படும் அளவில் காற்று அங்கிருந்து தாழ்ந்து இறங்கி வரும். வாணியம்பாடி நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ளது வெள்ளக்குட்டை என்ற கிராமம்.  கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல மடிப்புத் துண்டுகளாய ஒன்றுவிட்டு ஒன்றாக நிற்கும் குன்றுகளில் நாடுபார்த்தான் மலை என்று ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்தது அந்த கிராமம். அந்த ஊர் மண்ணின் மீது நின்று சுற்றி எல்லாத் திக்குகளையும் பார்த்தால் குன்றுகளே தென்படும். அந்தக் குன்றுகளின் தொட்டிலில் ஊஞ்சல் கட்டி அந்த கிராமத்தைத் தாலாட்டுவது போன்று ஒரு தாழ்வாரத்தில் அமைந்தது அந்த கிராமம்.
அங்கே 24 டிசம்பர் 1939ல் பிறந்தவர் வையவன். வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் வடக்கே திரும்பும் ஒரு சிறு சாலை வழியாகச் செல்லும் போது் அன்று முடிவடைகிறது ஊராக இருந்தது அது. தற்போது அந்தச் சாலை மலைப் பாதையாக சீரமைக்கப்பட்டு வளர்ந்து ஆம்பூர் நகரத்தோடு இணைகிறது.
அவரது பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் முருகேசன். தந்தை எம்.எஸ் பரமசிவம். தாய் டி.. அமிர்தசிகாமணி அம்மாள். அன்றைய கால வழக்கத்தின்படி மிக நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்ட அவர்களின் மூன்றாம் குழந்தை தான் வையவன். அதற்கு முன் இரண்டு குழந்தைகள் இறந்துவிடவே மூன்றாவது குழந்தையும் இறந்துவிடும் என்று பயந்து அவரது தாய் கருக்கலைப்பு செய்தார். இருந்தும் அதை மீறிப் பிறந்தவர் தான் வையவன்.
அவரது முன்னோர்கள் பரம்பரையாக சிறு விவசாயிகள். எனவே வையவனின் தந்தை விவசாயம் செய்திருந்தாலும் அதில் வளர்ச்சி இல்லை என்று கண்டு உள்ளூரில் சைக்கிள் கடை வைத்தும் பருப்பு வாணிகம் செய்தும் கிராமத்தில் அவற்றால் வளர்ச்சி காணமுடியாது 25 மைல் தொலைவில் இருந்த தம் மாமனார் ஊரான திருப்பத்தூர் சென்று அங்கே கடை வைத்துப் பார்த்தார். அதிலும் வெற்றி காணாமல் வெள்ளக் குட்டை கிராம நண்பர்கள் தூண்டுதலால் சென்னைக்குச் சென்றார்.
சென்னையில் பிராட்வேவுக்கு அருகில் இருந்தது கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட். அங்கே நண்பர் ஒருவரின் ஒத்தாசையமால் ஒரு கடையை அன்றாட வாடகை பிடித்து அதில் தக்காளி வியாபாரம் செய்யத் தொடங்கினார். அது 1942 – 43. வையவனுக்கு மூன்று வயது. தம் மகன் ஆங்கிலம் படிக்க வேண்டும் எம்.. பட்டம் பெறவேண்டும் என்ற கனவுகள் உள்ள தந்தையாக அவர் இருந்தார்.
பரமசிவம் ஒரு நல்ல வாசகர். செய்தி தாள்கள் கதைகள்.. நாவல்கள் வாசித்தல் என்று அவருக்கு வாசிப்பில் ஒரு தனி ஆர்வம் உண்டு. தம் மகனுக்கு (வையவன்) ஆங்கிலம் கற்பிக்க பீடி மண்டியில் குமாஸ்தாவாக வேலை செய்த ஒரு மராட்டியரிடம் தன் டியூஷன் ஏற்பாடு செய்தார். தமிழைக் கற்கும் முன்பே வையவன் ஆங்கிலமே முதலில் அறிமுகமாயிற்று. ஆங்கில மொழியின் மீதும்.. ஆங்கில இலக்கியத்தின் பாலும் வையவனுக்கு தனிப்பிரியம் ஏற்பட அதுவே காரணம்.
வையவனின் தாய் அமிர்த சிகாமணி ஒரு நல்ல கதை சொல்லி. உணர்ச்சி பூர்வமாக மனதில் பதியும்படி கதைகள் சொல்வார். மிகுந்த பக்தியுள்ள அவர் சென்னையில் தாம் வசித்த தங்கசாலை சௌகார்ப்பேட்டை திருவல்லிக்கேணி மயிலாப்பூர் திருவொற்றியூர் திருவள்ளூர் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் உள்ள ஆலயங்களுக்குத் தாம் செல்வதோடு வையவனையும் அழைத்துச் செல்வார். அமிர்த சிகாமணி ஸ்ரீ வைஷ்ணவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு முறைப்படி முத்திரை குத்திக்கொண்டவர். அவரிடமிருந்து மகனுக்கு அந்த செல்வாக்கு தானே தன்னையறியாமல் பரவியது.
அந்தக் காலத்தில் தினசரி என்ற செய்தித்தாளில் (.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியர்) வார மடல் வரும். அதற்குப் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி. கற்பனைச் சுவை மிகுந்த சிறுகதைகளும் பொற்றாமரை என்ற சீனக்கதையின் தொடரும் அதில் வாராவாரம் வெளிரும். பரமசிவம் தன் மகன் வாசிக்க அதை வாங்கி வந்து தருவார்.
நான்கு வயது நிரம்பியதுமே வையவன் கொத்தவால் சாவடிக்கும் அவர்கள் வசித்த ரெட்டிராமன் தெரு வீட்டுக்கும் அருகிலிருந்த மெட்ராஸ் புரோக்ஸிவ் யூனியன் உயர்நிலைப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தார். அது இரு மொழி மாணவருக்கான பள்ளி. அங்கு முதல் வகுப்பு தொடங்கி மூன்றாம் வகுப்பு வரை தமிழ் மாணவர்களும் தெலுங்கு மாணவர்களும் ஒன்றாகவே படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுக்கு மட்டும் வேறு பிரிவிற்குச் செல்ல வேண்டும்.
அவர்கள் குடியிருந்த வீடு ஒரு தெலுங்கர் வீடு. கூடவே வாடகைக்கு இருந்தவர்களும் தெலுங்கர்கள். வையவனின் சொந்த ஊர் வெள்ளக்குட்டையில் எதிர்வீடு ஒரு தெலுங்கு பேசும் சாத்தானி பிராம்மணர்கள் வசித்த வீடு. இவ்வாறு சிறு வருவத்திலேயே தெலுங்கின் சுற்றுச் சூழல் அவருக்கு ஏற்படவே தெலுங்கு வெகு சரளமாகப் பேசும் திறன் அவருக்கு அமைந்தது.(தொடரும்)